திருவிழாக்கள்

பிள்ளையார்பட்டியில் நிகழும் திருவிழாக்கள் முதலியவற்றை பார்க்கலாம், ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி சுக்ல சதுர்த்தியிலும் இரவு விநாயகப் பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வருவார், திருக்கார்த்திகை அன்று விநாயகப் பெருமானும் உமாதேவி சமேத சந்திரசேகரப்பெருமானும் திருவீதி பவனிவர பிள்ளையார் திருச்சன்னதியிலும் மருதங்குடி நாயனார் திருச்சன்னதியிலும் சொக்கப்பனை கொளுத்தப்பெறும்.

மார்கழி திருவாதிரை நாளன்று சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமான் திருவீதி பவனி வருவார், அன்று சிவகாம சுந்தரி ஊடலை நீக்க நடராஜப் பெருமான் கைக்கொள்ளும் உபாயங்கள் மிகவும் சுவையுடையன, ஊடல் நீக்கத்தின் பொருட்டாய் எழுதிக கொடுக்கும் பிடிகாடு வினோதமாய் இருப்பினும் அதன் அடிப்படை நோக்கம் பெரிதும் மகிழ்ந்து பாராட்டத்தக்கதாகும்

ஆண்டு தோறும் ஆவணித்திங்களில் வரும் விநாயக சதுர்த்தியே இக்கோயிலின் பெருந்திருநாள் ஆகும், இது பத்து நாள் விநாயகர் சதுர்த்திக்கு ஒன்பது நாள் முன்னதாகவே காப்புக்கட்டி கொடியேற்றம் செய்து திருநாள் தொடங்கப்பெறும், இரண்டாம் திருநாளில் இருந்து எட்டாம் திருநாளில் வரை காலை விழாவில் விநாயகர் வேள்ளி கேடகத்தில் உலா வருவார்

இவையன்றி இவ்வூர் கிராம தேவதையான கொங்கு நாச்சி அம்மன் கோயில் திருவிழா இங்கு பத்து நாள் விமர்சையாக நடைபெறும், வைகாசி மாதம் நடைபெறும் இத்திருவிழாவில் அம்பாள் பிள்ளையார் திருவீதியே வலம் வரும், ஒன்பதாம் திருநாளில் அம்பாள் தேரில் ஸ்ரீ கொங்கு நாச்சி அம்மன் கோயிலுக்கு சென்று மறுநாள் வரும் அன்று இரவு பிள்ளையார் சன்னதியில் பூப்பல்லக்கு நடைபெறும்,